“பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடூரங்களுக்கு சரியான தண்டனை எது என்பதை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெலுங்கானா காவல்துறை உணர்த்தி விட்டது.
ஹைதராபாத் பெண் கால்நடை மருத்துவரை திட்டமிட்டு தொடர்ந்து பலநாட்கள் கவனித்த பின்பு தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.
தெலுங்கானா மக்கள் குற்றவாளிகளை எரித்துக்கொள்ள வேண்டும் என்று போராடிய போராட்டத்திற்கு பின்பு தான் தெலுங்கானா காவல்துறை இன்று அதிகாலை நான்கு குற்றவாளிகளை என்கவுண்டர் செய்திருப்பதன் மூலம் காவல்துறை மீது சுமத்தப்பட்ட களங்கமும் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது.
இது போன்ற கடுமையான தண்டனைகள் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாலியல் ரீதியான கொடூர சித்ரவதையிலிருந்து பெண்கள் நிச்சயம் காப்பாற்றப்படுவார்கள். தேசிய அளவில் செயல்படுத்தப்படும் போக்சோ சட்டத்தில் கடும் தண்டனை கிடைக்கும் என்கிற பிரிவை சேர்த்திட வேண்டும்” என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:- "
பாலியல் ரீதியாக பெண்களை கொடுமைப்படுத்துபவர்கள் தப்பித்து வருகிற நிகழ்வு தான் பெரும்பாலும் நடைபெற்று வருகிறது. அரசியல்வாதிகள், காவல்துறை இருதரப்பும் சில நேரங்களில் கூட்டு சேர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் கொடூர வக்ரபுத்தி மிருகங்களை விடுதலை செய்துவிடுகிறார்கள்.
பெண்களின் எதிர்கால நலனுக்காக ஒட்டுமொத்த சமூகமும் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக ஓரணியில் திரண்டால் நிச்சயம் விடிவுகாலம் பிறக்கும். யாரோ ஒரு பெண்ணுக்கு நேர்ந்தது என ஒதுங்கிப்போகாமல் போராடிய தெலுங்கான மாநில மக்களை தலைவணங்குகிறேன்... மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்த தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அவர்களுக்கும், தெலுங்கான காவல்துறைக்கும் எங்களது அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பாக பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மா வழி நடக்கும் அரசு பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் நிச்சயம் செயல்படும் என நம்புகிறோம்” என்று டாக்டர் சேதுராமன் அறிக்கையில் கூறியுள்ளார்.